தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என்பதில் டெல்லி பாஜ மேலிடம் உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுக மாஜி அமைச்சர்கள் மூலம் எடப்பாடியிடம் டெல்லி பாஜ மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜ கூட்டணியே இனி கிடையாது என அதிமுக மாஜி அமைச்சர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். இதனால் கடுப்பான பாஜ மேலிடம் மார்ச் 31ம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படும் என்று கெடு விதித்திருந்தது.
இந்த சூழலில், எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. இதில், ரூ.650 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எடப்பாடி மகனும் சிக்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த எடப்பாடி, பாஜவிடம் சரணடைய முடிவு செய்தார்.
இதையடுத்தே, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 25ம் தேதி திடீரென டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தைப் பார்க்கச் செல்வதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அங்கு மூன்று கார்களில் மாறி, மாறி பயணம் செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்தித்துப் பேசினார். இருவரும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக-பாஜ கூட்டணி, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி விவகாரம், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் நிபந்தனைகளுக்கு உறுதியான பதிலை எடப்பாடி தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் டென்ஷனான அமித்ஷா, தனது கையில் இருந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் செய்த ஊழல் பைல்களை அடுக்கி உள்ளார். இதை பார்த்த எடப்பாடி, வியர்த்து விறுவிறுத்து போய் உள்ளார். இதனால், அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உறுதியாகி விட்டதாக பேசப்பட்டது. இதனை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தாமலும், மறுக்காமலும் இருந்து வருகிறார். சமீபத்தில் சேலத்தில் அளித்த பேட்டியில் கூட பாஜவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, ‘‘எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும்போது நாங்களே சொல்வோம்’’ என கூறியிருந்தார்.
எடப்பாடி சென்று வந்த மறுநாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று, அதிமுக – பாஜ கூட்டணி குறித்து பேசியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் கடந்த 28ம் தேதி அவசரமாக டெல்லி சென்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். பின், இருவரும் சேர்ந்து அமித்ஷாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பை தொடர்ந்து, செங்கோட்டையனின் சந்திப்பு அதிமுகவினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமீபகாலமாக, அதிமுகவில் எடப்பாடிக்கு பெரும் தலைவலி கொடுத்து தனி ஆவர்த்தனம் செய்து வரும் செங்கோட்டையனின் திடீர் டெல்லி பயணமும், அங்கு நிர்மலா சீதாராமன், அமித்ஷா உடனான சந்திப்பும், அதிமுகவினர் இடையே பரபரப்பையும், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. அதிமுகவில் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்ப நிலையில் தொடரும் செங்கோட்டையனை பாஜ தலைமை ஏன் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது, அந்தப் பேச்சுவார்த்தையில் என்னென்ன தகவல்கள் ஆலோசிக்கப்பட்டன என அதிமுக தலைவர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறியதுடன், தனது நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை. கட்சியில் மீண்டும் ஓபிஎஸ்சை சேர்த்துக் கொள்ளவே மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இது பாஜ மேலிடத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. தங்கள் வழிக்கு எடப்பாடி வராத பட்சத்தில், அதிமுகவை உடைத்து தங்கள் கருத்தை கேட்கும் தலைவர்களைக் கொண்டு புதிய அதிமுகவை கட்டமைக்கவும்பாஜ திட்டமிட்டதாகத் தெரிகிறது.
இதன் எதிரொலியாகவே, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அதிமுகவில் நிர்வாகிகள் மட்டத்தில் மட்டுமல்லாது, தொண்டர்கள் மட்டத்திலும் பரவலாக அறிமுகமாகி உள்ள செங்கோட்டையனை முன்னிறுத்துவதும், எடப்பாடியை அதிமுகவில் இருந்து கட்டம் கட்டுவதும் தான் பாஜ மேலிடத்தின் புதிய திட்டம். கட்சித் தலைமை செங்கோட்டையன் வசம் வரும் பட்சத்தில் சசிகலா, டிடிவி. தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் கொண்டு வருவதில் சிரமம் இருக்காது. மேலும், அதிமுக முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளது. இப்போது இருக்கும் குழப்பமான நிலைமையில், செங்கோட்டையன் தலைமை பொறுப்புக்கு முன்னிறுத்தப்படும் சூழலில், இரண்டாம் கட்டத் தலைவர்களும் மறுப்பேதும் இன்றி அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். அதிமுக இரண்டாக உடையும் நிலையில், செங்கோட்டையன் தலைமையிலான அணியை உண்மையான அதிமுக என அறிவித்து, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்பதே பாஜவின் திட்டம்.
இந்த புதிய திட்டத்தை பாஜ தற்போது முழு வீச்சில் அமல்படுத்த ஆரம்பித்து விட்டது. அதிமுக இணைப்பு குறித்த கேள்விகளுக்கு எப்போதுமே அடக்கி வாசிக்கும் ஓபிஎஸ் கூட சில தினங்களுக்கு முன், ‘‘எடப்பாடி கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து மரியாதையாக விலகிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், அவமரியாதையை சந்திப்பார்’’ என்று மிரட்டலாகப் பேசியதன் பின்னணியில் பாஜவின் கைகள் இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த அமித்ஷா, ‘‘தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. உரிய நேரத்தில் உடன்பாடு எட்டப்பட்டு சரியான நேரத்தில் முடிவை அறிவிப்போம்’’ என கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். அதிமுக மாஜி அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான உதயகுமார் ஒரு படி மேலே போய், ‘‘வல்லபாய் பட்டேலுக்கு இணையானவர் அமித்ஷா’’ என்று புகழாரம் சூட்டி கட்சியில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். நடக்கும் இந்த அதிரடி மாற்றங்கள் எடப்பாடிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு செங்கோட்டையனை பாஜ முன்னிறுத்துமானால், இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் தன்னை கைகழுவவும் தயங்க மாட்டார்கள் என்ற அச்சம் எடப்பாடிக்கு உள்ளூர எழுந்துள்ளது. நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், பிரச்னையை சமாளிக்க, பாஜ தலைமையிடம் முழுமையாக சரண்டர் ஆவது தவிர எடப்பாடிக்கு இப்போது வேறு வழியில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க, ஏப். 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இந்த வருகையின் போது, பிரதமரை சந்தித்து பேசவேண்டிய நெருக்கடிக்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார். பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்தபின் டெல்லி செல்வதற்காக மதுரை வரும் பிரதமரை விமான நிலையத்தில் வைத்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரதமருடனான இந்தச் சந்திப்பின் போது, கூட்டணி விவகாரம், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
கட்சியில் தனது இருப்பைக் தக்கவைத்துக் கொள்ளவும், தேவையற்ற குழப்பங்களையும், சர்ச்சைகளையும் தவிர்க்கவும், பாஜவின் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருப்பதாகவும், ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடனான சந்திப்பின் போது, பாஜ வைக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையான சம்மதத்தை அவர் தெரிவிப்பார் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.