அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டார். நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது அவர் , பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டிட தானம் தயார். பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யலாம் என எடப்பாடி நினைக்கிறார் என வாதிட்டார். அவரது வாதம் முடிந்ததும் மதிய உணவுக்காக விவாதம் நிறுத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதத்தை தொடங்கினார். அவர் கூறியதாவது:
பதவிகள் காலவதியாகிவிட்டதாக ஒருவர் கூற முடியாது. ஒற்றைத்தலைமையை தொண்டர்கள் விரும்பினாலும் அதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எந்த காரணத்துக்காகவும் காலியாக வைத்திருக்க முடியாது. பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ, எம்.,பி, அமைச்சர் என பல பொறுப்புகள் வகித்த என்னை எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து ஜேசிடி பிரபாகரன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் தனது வாதத்தை தொடர்ந்தார். அதன் பின்னர் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடங்கினார். அவர் கூறியதாவது”
யாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பது உலகத்துக்கே தெரியும். பன்னீர்செல்வம் தனக்கென தனிக்கட்சி நடத்தி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் எந்த நோட்டீசும் கொடுக்காமல் தனது சகோதரரை கட்சியில் இருந்து நீக்கினார்.
ஓபிஎஸ் தான் உண்மையான அதிமுக என்றால் அவர் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ் எங்களை கட்சியில் இருந்து நீக்கி நிர்வாகிகளை நியமித்து உள்ளார். பொதுக்குழு முடிவு தான் இறுதியானது. இதற்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. அதை பொதுக்குழு ரத்து செய்து விட்டது. திமுகவை எதிர்கொள்ள வலுவான தெளிவான, ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஓபிஎஸ் சை நீக்க வேண்டும் என்பது பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லை.
கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர்தேர்தல் நடக்கிறது. அதை தடுக்க முடியாது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது. பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.