கோவை அன்னூரில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழில் இல்லாததால் விழாவை புறக்கணிததாக செங்கோட்டையன் இன்று பேட்டி அளித்தார். எடப்பாடியை எதிர்த்து அதிமுகவில் ஒரு சீனியர் வெளிப்படையாக பேட்டி அளித்தது, அதிமுகவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கோஷ்டி பூசல், வழக்கு போன்றவைகளை சந்தித்து வரும் எடப்பாடிக்கு செங்கோட்டையனின் பேட்டி மேலும் டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி முக்கிய நிர்வாகிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செல்லூர் ராஜூ, ஆர். வி. உதயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
செங்கோட்டையன் இப்படி திடீரென போர்க்கொடி தூக்க காரணம் என்ன, அவரது பின்னால் பாஜக இருக்கிறதா, சசிகலா அல்லது ஓபிஎஸ் தூண்டுதலால் இப்படி பேசுகிறாரா, இந்த பிரச்னையை எப்படி கையாளுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விழாவை அதிமுக நடத்தவில்லை. அனைத்துக்கட்சி விவசாயிகள் கூட்டமைப்பு தான் நடத்தியது. இதில் அனைத்து கட்சி விவசாயிகளும் உள்ளனர். இதற்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, தனது புகைப்படங்கள் விழா நிகழ்ச்சிகளில் போடப்படுவதில்லை என புகார் கூறியது குறித்து கேட்டபோது, கோகுல இந்திராவுக்கு மனக்குறை இருந்தால் பொதுச்செயலாளரிடம் முறையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.