கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரும், அதிமுகவின் சீனியர்களில் ஒருவருமான செங்கோட்டையன் இந்த விழாவை புறக்கணித்தார்.
இந்த விழாவை புறக்கணித்தது குறித்து செங்கோட்டையில் கோபியில் நிருபா்களிடம் கூறியதாவது:
ஈபிஎஸ்சுக்கு நடந்த பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தாம் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் நாங்கள். அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம் பெறவில்லை. ஆகையால் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை , மேலும் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராமலிங்கம். அவரது படமும் இடம் பெறவில்லை.
இது குறித்து நான் சில தினங்களுக்கு முன் விழாக்குழுவிடம் தெரிவித்தேன். அதன் பிறகும் படம் இடம் பெறவில்லை. எனவே அந்த விழாவுக்கு செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி மீது கடந்த பல வருடங்களாக செங்கோட்டையன் கோபத்தில் இருப்பதாக அதிமுகவினர் கூறி வந்த நிலையில், இப்போது தான் முதன் முதலாக செங்கோட்டையன் தனது மனக்குமுறலை வெளியே கொட்டி உள்ளார். இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கோட்டையனின் போர்க்கொடி எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.