Skip to content
Home » மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:

ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும்.

திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம் சென்னிமலையில் ஏற்படுத்தப்படும். இதற்கான  பணி விரைவில் தொடங்கும்.  சென்னிமலை உள்பட  50 கிராமங்களில் ரூ.15 கோடியில்  கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

ஈரோடு சிக்கயநாயக்கர் கல்லூரியில் ரூ.10.75  கோடியில் விளையாட்டு மைதானம்,  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். விரைவில் ஈரோடு மாவட்டத்தில் ஐடி பூங்கா அமைக்கப்படும்.

நான் நேற்று ஈரோட்டுக்கு வந்தபோது இந்த மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து  கலெக்டருடன் ஆய்வு நடத்தினேன்.  தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மக்கள் பணிகளை செய்து வருகிறோம்.  ஈரோட்டில் மட்டும் 7630 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

திமு ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லாததால் பொய் சொல்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி,   திமுகவின் வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல் புலம்புகிறார்.மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மழை  தொடங்கிய உடன் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் களத்திற்கு சென்றனர். நானே மாவட்ட கலெக்டர்களிடம் பேசி நிலைமைகளை கேட்டேன். நானே விழுப்புரம் மாவட்டம் சென்றேன்.

முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணை திறந்ததாக கூறினார். உண்மையில் 5 முறை முன்னெச்சரிக்கை விடப்பட்டது.  நாங்கள் எச்சரிக்கை செய்ததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை  முன்னறிவிப்பு இன்றி  திறந்ததால் 200க்கும் மேற்பட்டவர்கள்  இறந்தார்கள். வீடுகள் மூழ்கியது. அமைச்சர்கள் யாரும் களத்திற்கு போகவில்லை. தன்னார்வலர்கள் தான் சென்றனர்.

அது மனிதனால் உண்டாக்கப்பட்ட  பேரழிவு என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அடுத்து  டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பழனிசாமி கிளப்பினார்.  சுரங்கத்தை  ஏலம் விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல்,  திமுகவை கண்டித்தார்.  செந்தில்  வாழைப்பழ காமெடி போல சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார்.  நான் முதல்வராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என்றேன்.  இந்த சுரங்க மசோதாவிற்கு  நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததே அதிமுக தான்.

பொய் நெல்லை வைத்து பொங்கல் வைக்க முடியாது என்பதை பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களை பார்த்து   இவ்வளவு பேசுகிறீர்களே, மத்திய அரசை பார்த்து கீச்சு குரலிலாவது கண்டனம் தெரிவிக்க வில்லையே.  மத்திய அரசைபார்த்து பயப்படுகிறார். காரணம் மடியில் கனம்.  திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் கொடுத்த  வெற்றி மகத்தானது. மக்களாகிய நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு என்றும் உறுதுணையாக இருப்பனே். எங்கள் நல்லாட்சிக்கு எப்போதும் உங்கள் நல்லாசி வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, முத்துசாமி,  அன்பில் மகேஸ்,  கயல்விழி, மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள், கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.