அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ்சும் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை அலுவலகத்தை, அதிமுகவின் கோவிலை என்று அவர் உடைத்தாரோ, அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை.ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்,” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவில் இணைகிறேன் என நான் சொல்லவே இல்லை. பிரிந்து கிடக்கிற அதிமுக சக்திகள் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றுதான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்.
ஆனால், அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமி தானாகவே விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகவில்லையென்றால் அவமரியாதையை சந்திப்பார். சென்னையில் அதிமுக அலுவலகம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அதிமுக அலுவலகத்தை இபிஎஸ் தரப்பினர் தாக்கிவிட்டு எங்கள் மீது பழி போடுகின்றனர்,”இவ்வாறு அவர் தெரிவித்தார்.