Skip to content
Home » சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

அரியலூர் – அம்மாவின் ஆட்சியில் என்று கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி நான், எனது ஆட்சி என்று பேசி தனது தலைமையை உறுதி செய்தார்.

 

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்றப்பிறகு மின்கட்டணம், பால் விலை, கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட திருமணத்துக்கு தங்கம், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதியோர் திட்டத்தில் பயனாளிகள் குறைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசும்போது, நான் எனது ஆட்சியில் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி தனது தலைமையை உறுதி செய்தார். மேலும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பெரிய பொறுப்புகளில் அமரலாம். நான் கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் முதலமைச்சரானேன் என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *