அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 150 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சென்னையில் தாழ்தள பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவற்ற பிறகு, மின்சார பேருந்துகளும் செயல்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறையில் பொது மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் கையடக்க கருவி மூலம் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்த கேள்விக்கு, எங்களைப் போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி விரைவில் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என காத்திருக்கிறோம். முதலமைச்சர் தான் நடவடிக்கை எடுப்பார்.
பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தான் தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கானவர் உதயநிதி செயல்பாட்ட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார். எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர் என்று
கூறினார்.கலைஞர் நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்து கேட்டபோது, எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதலமைச்சரானவர். அவருக்கு அடிப்படை அரசியல் தெரியாமல் முதலமைச்சர் ஆகியுள்ளார். இது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும்போது, அதில்
கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. எடப்பாடியை பொருத்தவரை ஜெயலலிதாவிற்கு கூட விழா எடுக்காமல் போனவர் என முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும்.
சீமான் குறித்து கேட்டபோது, காய்ச்ச மரம் கல்லடி படும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம். ஆனால் நீங்கள் சொல்கின்ற நபர் எல்லாம், ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார்கள். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள் என கூறினார்.