அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்றப்பிறகு மின்கட்டணம், பால் விலை, கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட திருமணத்துக்கு தங்கம், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதியோர் திட்டத்தில் பயனாளிகள் குறைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசும்போது… நான் எனது ஆட்சியில் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி தனது தலைமையை உறுதி செய்தார். மேலும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பெரிய பொறுப்புகளில் அமரலாம். நான் கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் முதலமைச்சரானேன் என தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. ஆட்சி பொருப்பேற்றது முதல்,
போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக உள்ளது. இதுவே திமுகவின் சாதனையாக உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிய உதயநிதி, இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவும் இல்லை என குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். மேலும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி உள்ள திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.