சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சென்னையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, டில்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக டைரக்டர் அமீர் உள்ளிட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, தி.நகர் ராஜா தெருவில் உள்ள திரைப்பட இயக்குனர் அமீர் அலுவலகம், சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள, ஜே.எஸ்.எம்., ரெசிடென்சி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஜாபர் சாதிக் நடத்தி வரும் டீ கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்தநிலையில் சோதனை குறித்து இன்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் … கடந்த ஏப்ரல் 9ம் தேதி சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய ரூ.40 கோடியை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளார். சினிமாவில் 6 கோடியை நேரடியாக முதலீடு செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்கில் ரூ.21 கோடி கறுப்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள்.. அமலாக்கத்துறை தகவல்..
- by Authour