தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து 34 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
2 நாள் நடைபெற்ற இந்த சோதனையில் மணல்குவாரி அதிபர் ராமச்சந்திரன, திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளில் கணக்கில் வராத பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாகத்துறை அறிவித்தது. இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் அமலாக்கதுறைக்கு இந்த வழக்குகளை தொடர்வதற்கான அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். அமலாகத்துறை தொடர்ந்த வழக்கின் மீது எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது, அமலாகத்துறையின் அதிகார வரம்புக்குள் இந்த கனிமவளச்சட்டம் வராது என்றும் எனவே இந்த வழக்கை ரத்து செய்து சொத்து முடக்கங்களை நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.