தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு இப்போதே சோதனை என்ற பெயரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை தொடங்கி விட்டதாக தமிழக மக்கள் கூறுகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவர்கள் அடுத்தடுத்து தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள் என மக்கள் பேசத்தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் தான் சில தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்தது. தமிழ்நாட்டில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று மாலை, அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி முறைகேடு என்ற செய்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
டாஸ்மாக் கொள்முதலில் எந்த சலுகையும் யாருக்கும் காட்டப்படவில்லை. எந்த சரக்கு அதிகம் விற்பனையாகிறதோ, அந்த சரக்கு அதிகம் கொள்முதல் செய்யப்படும். அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் டெண்டரில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதனை மெருகேற்றி முறையாக டெண்டர்கள் வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஒருமுறை ஆயிரம் கோடி முறைகேடு என்கிறார். இன்னொரு முறை 40 ஆயிரம் கோடி என்கிறார்.
படத்தில் வரும் காட்சிகள் போல எதிர்க்கட்சிகள் மாறி மாறி பேசி வருகின்றன.
2 தினங்களுக்கு முன்னரே ஒருவர் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என பேட்டியில் கூறி விட்டார். அவர் சொன்னபடியே நேற்று அமலாக்கத்துறையும் ஆயிரம் கோடி முறைகேடு என கூறி விட்டது. இதில் இருந்தே, இந்த விஷயத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது தெரிகிறது.
நாங்கள் எந்த புதிய ஆலைகளையும் திறக்கவில்லை. புதிய கடைகளையும் திறக்கவில்லை. 500 கடைகளை மூடி இருக்கிறோம். அதன் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டனர். குடும்ப சூழல் காரணமாக, மற்றும் பல்வேறு காரணங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படையில் எப்ஐஆர் போடப்பட்டது என்பதை அவர்கள் முழுமையாக சொல்லவில்லை.
தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையைஏவியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன்வைக்கிறார்கள். அமலாக்கத்துறை எடுத்துள்ள சோதனையை சட்ட ரீதியாக தமிழக அரசும், டாஸ்மாக்கும் எதிர்கொள்ளும்.
ஒரு கடைநிலை ஊழியர் தவறு செய்து விட்டால், அதற்கு உயர் அதிகாரி எப்படி பொறுப்பாவார்? நீங்கள்(பத்திரிகையாளர்கள்) தவறு செய்தால், உங்கள் நிறுவனத்தின் அதிபர் அதற்கு பொறுப்பு ஏற்பாரா?
ஆயிரம் கோடி முறைகேடு என்ற செய்தியை நேற்று மாலை ஏன் வெளியிட வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழக முதல்வரின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம், இருமொழிக்கொள்கை ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை.
தமிழக மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாற அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.