திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே. என். நேருவின் மகன், அருண் நேரு பெரம்பலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். இவரது வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இன்று காலை அருண் நேரு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.
இதுபோல திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள அமைச்சர் நேருவின் மகள் மற்றும், தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கி உள்ளது. சென்னை, கோவை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடக்கிறது. சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதால் திமுக நிர்வாகிகளை குறிவைத்து மத்திய அரசு இப்போது அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளதாக திமுகவினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.