திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்து வருபவர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட், மணல் குவாரிகள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே தரணி குழும அலுவலகமும் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி சி.ஆர்.பி.எஃப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவரது முதல் மகன் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியை நிர்வகித்து வருகிறார். 2-வது மகன் திண்டுக்கல் மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டியின் தொடர்பில் இருந்து அதிகளவு பணத்தை முறைகேடாக மாற்றியதாக புகார் எழுந்தது. அப்போது இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரத்தினத்தை கைது செய்தனர். அதன் பின்பு தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மணல் குவாரிகள் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
தொழிலதிபர் ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன். இவர் என்.ஜி.ஓ.காலனி அருகே ஹனிபா நகரில் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்க், மணல் குவாரி, நிதி நிறுவனம் மற்றும் ரியல்எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது வீட்டிலும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் இன்று ஒரே நேரத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் கேரளாவில் இருந்து 8 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.