பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்குகிறது. 2 நாட்கள் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் 24 கட்சித்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துவது பாஜகவுக்கு மிப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் அமலாக்கத்துறையை ஏவி விட்டு உள்ளது.
இந்த சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அந்த பிரச்னையை பொன்முடி சட்டப்படி சந்திப்பார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 11 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வழக்குக்கு இப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. இடையில் 10 வருடங்கள் அதிமுக ஆட்சி நடந்தது. அப்போதெல்லாம் சோதனை நடக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்கவுமில்லை. முந்தைய ஆட்சியாளர்களால் போடப்பட்ட 2 வழக்கில் அமைச்சர் பொன்முடி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். எது எப்படி இருந்தாலும் வருகிற மக்களவை தேர்தலில் இதற்கு நிச்சயமாக தமிழக மக்கள் பதில் தருவார்கள். பீகாரிலும், கர்நாடகத்திலும் நடத்திய உத்தியை இப்போது இங்கு அரங்கேற்றி உள்ளனர். பாஜக நடவடிக்கையால் எங்களுக்கு தேர்தல் பணி எளிதாகிறது.
எங்களுக்காக ஏற்கனவே ஆளுநர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்து உள்ளது. இந்த சோதனை எதற்காக நடக்கிறது. என்பது உங்களுக்கு(பத்திரிகையாளர்கள்) தெரியாதா?
காவிரி விவகாரம் குறித்து கலைஞர் எங்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து உள்ளார். அந்த திட்டத்தில் இருந்து கிஞ்சித்தும் விலகாமல் அதை செய்படுத்துவோம். மேகதாது அணை பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக உள்ளோம்.பெங்களூருவில் நடைபெறும் கூட்டம் காவிரி பிரச்னைக்காக நடத்தப்படுவது இல்லை. இந்தியாவுக்கு பெரிய ஆபத்து உள்ளது. அந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற இந்த கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.