முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பணியாற்றியபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தபோதிலும், அவர் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது தீவிர பணி காரணமாக கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக நினைத்து பார்க்க முடியாத தோல்வியையும், திமுக மகத்தான சாதனையையும் பெற்றது.
கொங்கு மண்டலத்தையே திமுக கோட்டையாக கட்டி எழுப்பினார் செந்தில் பாலாஜி. அவரது பணி அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. இவர் களத்தில் இருந்தால் பாஜக இங்கு வேராடு மட்டுமல்ல, வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு துடைக்கப்பட்டு விடும். எனவே இதற்கு என்ன முடிவு செய்யலாம் என பாஜகவினர் திட்டம் போட்டனர்.
அந்த திட்டத்தில் உருவானது தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை என அரசியல் நோக்கர்கள் அனைவரும் இன்று வரை அழுத்தமாக கருத்தை பதிவு செய்கிறார்கள். அதே நேரத்தில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடி களபணியால் தோல்வியை தழுவிய அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார்.
செந்தில் பாலாஜி களமாடினால் பாஜக இங்கும் டெபாசிட் கூட வாங்க முடியாது. எனவே தேர்தல் முடியும் வரை அவர் வெளியே வர முடியாதபடி செய்து விட வேண்டும் என பாஜக உருவாக்கிய திட்டத்தின்படி தான் இன்று வரை நடந்து வருகிறது என பாஜக நிர்வாகிகளே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்.
கோவையில் பாஜக எம்.பி சீட்டுக்கு தனக்கு தடையாக இருப்பாரோ என கருதிய ஒரு பழைய பாஜக காரரை அண்ணாமலை தனது செல்வாக்கால் கோவையில் இருந்தே நகர்த்தி விட்டார். இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். தேர்தலுக்கு முன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து விடக்கூடாது என்பது தான் அண்ணாமலையின் வேண்டுதலாக இருந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் ஒருவேளை ஜாமீன் கிடைத்து விடுமோ என்ற பயம் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை தொற்றிக்கொண்டது. இந்த நிலையில் நேற்று அண்ணாமலை டில்லி சென்றிருந்தார். அவர் அங்கு சில பாஜக உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.
அடுத்த கட்டமாக இன்று காலையிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டி என்ற கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வீட்டில் அமைச்சரின் வயதான பெற்றோர் வசித்து வருகிறார்கள். அங்கு இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஒருவரின் வீட்டில் 7 மாதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?. இந்த 7 மாதத்தில் அமைச்சர் தனது குடும்பத்தில் யாரையும் சந்திக்க கூட இல்லை. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு ஏன் இப்போது சோதனை நடத்த வேண்டும் என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுகிறது.
இந்த சோதனையிலும் அவரது வீட்டில் சில ஆவணங்கள் சிக்கியது என புதிதாக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து இந்த சோதனையை நடத்துவதாக ராமேஸ்வரபட்டி மக்கள் குமுறுகிறார்கள். இது நேற்று டில்லி சென்ற நபரின் தூண்டுதல் பேரில் நடைபெறும் சோதனை என கரூர் மாவட்ட மக்கள் அனைவரும் கூறுகிறார்கள். எனவே இதற்கெல்லாம் சேர்த்து தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் நாம் அவர்களை தோற்கடிப்பது தான் ஒரே வழி என்ற சபதம் ஏற்றுள்ளனர் கரூர் மாவட்ட மக்கள்.