திருச்சி திருவானைக்காவல் அடுத்த கொண்டையம்பேட்டை மற்றும் உத்தமர் சீலி ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளை புதுக்கோட்டையை சேர்ந்த மணல் மாபியா என்று வர்ணிக்கப்படும் ராமச்சந்திரன் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியிலும் இவர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து இந்த மணல் குவாரிகளை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இப்போதும் இவரே மணல் குவாரிகளை நடத்தி வருகிறார்.
இந்த குவாரிகளில் அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்டையம்பேட்டை குவாரிக்கு வந்தனர். சுமார் 10 அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அவர்களைத்தொடர்ந்து மத்திய போலீசாரும் அங்கு வந்தனர்.
அவர்கள் அங்கிருந்து எந்த லாரியையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு லாரியாக எவ்வளவு மணல் ஏற்றப்பட்டு உள்ளது. அதற்கான பில் தொகை எவ்வளவு, பில்லில் உள்ள தொகை தான் வசூலிக்கப்படுகிறதா என விசாரித்தனர்.
பின்னர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மணல் அள்ளப்படுகிறதா, அதிலும் எவ்வளவு ஆழம் வரை மணல் எடுக்கப்படுகிறது என ஆய்வு செய்தனர். அங்கு குவிக்கப்பட்டுள்ள மணல் எத்தனை யூனிட் இருக்கும் என விசாரித்தனர். குவாரியின் பொறுப்பாளர்களாக இருந்த சிலரை பிடித்து துருவி துருவி விசாரிக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் உத்தமர் சீலி குவாரியில் பகல் 12 மணி வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. அங்கு ஆன் லைன் மூலம் மட்டுமே மணல் கொடுக்கப்படுவதால் சோதனை நடைபெறவில்லை என தெரிகிறது.
இதுபோல ராமச்சந்திரனுக்கு சொந்தமான புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தில் உள்ள வீடு, நிஜாம் காலனியில் உள்ள அலுவலகம் என பல இடங்களிலும் சோதனை நடக்கிறது. வேலூர் பள்ளிகொண்டா கந்தனேரியில் உள்ள மணல் குவாரியிலும், நாமக்கல்லில் உள்ள மணல் கிடிடங்கிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது.
இதுபோல சென்னை உள்பட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடக்கிறது. மணல் மாபியா ராமச்சந்திரனை குறி வைத்தே இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஏரியாவை தாண்டி மணல் எடுக்கப்படுகிறதா, ஒவ்வொரு லாரியிலும் எவ்வளவு மணல் அள்ளப்படுகிறது. கோர்ட் கூறியுள்ள நெறிமுறைகள் படி மணல் எடுக்கப்படுகிறதா, அதை மீறி பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்படுகிறதா என அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் இந்த குவாரியில் இருந்து இன்று மணல் லாரிகள் செல்லவில்லை. அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணல் மாபியா ராமச்சந்திரனை குறிவைத்து தமிழகம் முழுவதும் இன்று ரெய்டு நடக்கிறது.கொண்டையம்பேட்டை குவாரியில் இருந்து முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.