திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் ரூ3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். இதனடிப்படையில் கடந்த மாதம், அங்கித் திவாரிக்கு டாக்டர் சுரேஷ் பாபு ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்தார். ஆனால் இடைவிடாமல் மேலும் ரூ31 லட்சம் லஞ்சப் பணத்தை தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டி இருந்தார். இதனால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய ரூ31 லட்சம் ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ் பாபு கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட அங்கித் திவாரி உடனே காரில் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் விடாத தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கித் திவாரியை விரட்டிச் சென்று மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரி காரில் பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணம் ரூ31 லட்சத்தையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். பின்னர் அங்கித் திவாரியை அதிரடியாக கைது செய்தனர். அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார் யார் என்பது தொடர்பாகவும் துருவி துருவி விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவிலேயே மாநில போலீசார், அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் டிஎஸ்பி தலைமையிலான 10 போலீசார் உள்ளே நுழைந்து அதிரடி சுமார் 7 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
15 மணி நேரம் விசாரணை முடிந்து அங்கித்திவாரியை லஞ்ச்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இந்தநிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி வீடு மற்றும் அவர் அலுவலகத்தில் பயன்படுத்தி்ய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.