வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்(35)கை கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள், முகேஷ்,(33), முஜிபுர்(34) மற்றும் அசோக்குமார்(34), சதானந்தம்(55) ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அமலாக்கத்துறையினர் 3 நாட்கள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளி சதானந்தம் ஆகியோரிடம் சிறைக்கு சென்று விசாரித்துள்ளனர். அதை வீடியோவில் பதிவும் செய்துஉள்ளனர். அது மட்டுமின்றி, ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர், புகாரி ஒட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு (32) விடம் நேற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது கணவர் ஜாபர்சாதிக் மற்றும் நண்பர்கள் தொடர்பான கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை ஜாபர்சாதிக் கொடுத்துள்ளார். அது தொடர்பான வாட்ஸ்சப் தகவல் அழிக்கப்பட்டது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் வாட்ஸ்சப் தகவல் அழிக்கப்பட்டுள்ளது குறித்தும் அதிகாரிகள் ஜாபர் சாதிக் மனைவியிடம் கேட்டுள்ளனர்.