தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளராக எம்.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார்.
இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர் பணியாற்றி வந்த அலுவலகம் என பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். காட்பாடி, ராணிபேட்டையில் உள்ள வீடுகளில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.3.59 கோடி மதிப்பிலான ரொக்க பணம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.4 கிலோ வெள்ளி பொருட்கள், 61 தங்க காசுகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையை தொடர்ந்து இணை தலைமை பொறியாளரான பன்னீர்செல்வத்தின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை கைதை தொடர்ந்து அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே சட்டவிரோத பணம் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பன்னீர்செல்வம் தொடர்பான வழக்கு விபரங்களை பெற்று விசாரணை நடத்தினர். அதில் அவர் பணிக் காலத்தில் சட்டத்திற்கு முரணாக பல கோடி ரூபாய் பெற்றதும், உறவினர்கள் பெயர்களில் சொத்துக்கள் சேர்த்து இருந்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான ரூ.1.12 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துக்கள் மற்றும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.59 கோடி ரொக்கம், 61 தங்க காசுகள், 3கிலோ 625 தங்க நகைகள், 6 கிலோ 492 கிராம் வெள்ளி பொருட்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.