பெஞ்சல் புயல் தாக்குதலால் விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி மரக்காணம் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சேறு, சகதியில் நடந்து சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 56 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. புயல் தாக்குதலால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
இவற்றை சீரமைக்க 2 நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. 900 களப்பணியாளர்களை கொண்டு முழுமையாக சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 24ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளது.
மின்வாரியத்தின் சீரான சிறப்பான பணியை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உள்ளனர். முதல்வரின் உத்தரவுபடி மின்வாரியத்தின் வேகம், செயல்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.