சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை தவிர்த்து பல்வேறு மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், இதை மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மின்சார வாரியத்துக்கு சென்னையில் சொந்தமாக இடம் இல்லை. இதன் காரணமாக மின்சார வாரியம் துணை மின் நிலையம் மற்றும் டினாஸ்ஃபார்மர்களை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அமைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலத்துக்கான தொகையை மின்சார வாரியம், சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். இதன் காரணமாக மின்சார வாரியத்துக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய தொகை 100 கோடியாகிவிட்டது. எனவே, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாக்கி உள்ள ரூ.100 கோடியை மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்களில் கட்ட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு எந்த வித நிலுவையும் இன்றி மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது என்கின்றனர்.
