திருச்சி பெல்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கு பல தனியார் தொழிற்சாலைகள் கொண்ட சிட்கோ (தொழிற்பேட்டை) துவாக்குடியில் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலைகளுக்கு மின்விநியோகம் கொடுப்பது, டிரான்ஸ்பார்மர் அமைப்பது, ஒரு மின் திட்டத்திலிருந்து மற்றொரு மின்திட்டத்திற்கு மாற்றுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக தொழிற்சாலை உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் போது, மின்வாரிய அதிகாரிகள் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கறாராக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவரும், துவாக்குடி மின்வாரிய பொறியாளர் ஒருவரும் உரையாடிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில்
மின்வாரிய உதவி பொறியாளர் பாஸ்கர் என்பவர் தொழிற்சாலை உரிமையாளரிடம் கறாராக பேசி லட்ச கணக்கில் லஞ்சமாக பெறுகிறார் என்றும், அந்தத் தொகையை உயரதிகாரிகளுக்கு சரிசமமாக பங்கீடு செய்யாமல் குளறுபடி செய்கிறார், மேலும் AE பாஸ்கர் , மின் நுகர்வோர் மற்ற அதிகாரிகளை பார்க்க அனுமதிக்காமல் தானே பணம் வாங்கும் விவரங்களை கையாண்டு வருகிறார் என்றும் பேசியுள்ளனர்.
மேலும் இதில் ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய் பெற்ற போது, அதில் பாஸ்கர் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கியதாக கூறி மற்ற அதிகாரிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் பங்கு பிரித்துக் கொடுத்ததாகவும் பேசியுள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரி வந்து விசாரணை நடத்தி உள்ளார்.
ஒரு மின்வாரிய அதிகாரி லஞ்சம் பெறுவதையும் அதை அந்த வாரியத்தில் உள்ள சக அதிகாரிகளே பகிரங்கமாக பேசுவதும் ஆடியோவில் வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ அடிப்படையில் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போலீசில் புகார் செய்ய இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.