சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அமைச்சருடன் சென்றிருந்தனர்.
அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து பேசினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 52% மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன் 4 % குறைக்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் 30 சதவீதம் மட்டுமே உயா்த்தப்பட்டு உள்ளது. 43 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். உரிய ஆவணங்கள் இருந்தால் மேய்க்கால் புறம்போக்கில் வசிப்போருக்கும். மின் இணைப்பு கொடுக்கப்படும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 3 நாளில்மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்த திட்டங்கள் அனைத்தும் இப்போது விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களையும் முடிக்க முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். அதிமுகவினர் மின்துறை பற்றி தவறான தகவல்களை தந்துள்ளனர்.
கடலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மத்திய அரசிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.4 என்ற அளவில் கொள்முதல் திட்டமிடப்பட்டுள்ளது. கடலில் காற்றாலை மூலம் 2 ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கடலில் காற்றால அமைத்து 35 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இடத்தை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. வட சென்னையில் 2 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்.
மேல்நிலை மின்கம்பிகளை புதை வட மின்கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டில் 27 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மின்துறையில் 4 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டார். பல்வேறு புதிய திட்டங்களையும் அப்போது அவர் கூறினார்.