வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் கட்டிடங்கள் சீட்டக்கட்டுகள் போல் சரிந்தன. சம்பவம் நடந்த போது இரவு நேரம் என்பதால், பெரும்பாலானோர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
காலையில் 350 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் நேரம் ஆகஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இன்று மதிய நிலவரப்படி 820 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீட்பு பணி தொடர்ந்து நடப்பதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா உள்பட பல நாடுகள் மொராக்கோவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.