துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்நிலையில், துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் நிலை என்ன? என்பதில் அச்சம் நிலவி வருகிறது. அதேவேளை, நிலநடுக்கத்தால் உணவு, குடிநீருக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால் உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நில நடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகளுக்கு ரூ.33 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.