திருச்சியில் உள்ள ஜாபர்ஷா தெரு மற்றும் பெரியகடை, சின்ன கடை வீதிகளில் உள்ள ரூபி ஜூவல்லர்ஸ், நியூ ஒரிஜினல் ஜூவல்லர்ஸ், விக்னேஷ் ஜூவல்லர்ஸ், சக்ரா ஜெயின்ஸ் ஜூவல்லர்ஸ் ஆகிய நகைக்கடைகளிலும், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும் நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கி இன்று மாலை 6 மணிக்கு பிறகும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா மற்றும் அந்நிய செலவாணி மோசடி தொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. சென்னை பாரி முனையிலும் இதே நேரத்தில் சில நகை கடைகளில் சோதனை துவங்கியது.
இதில் வேதனை என்ன வென்றால் திருச்சியில் நடந்து வரும் சோதனை குறித்து அருகிலேயே உள்ள கோட்டை போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. சுமார் 12 மணி நேரத்திற்கு பி்ன்பு தான் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, அமலாக்கத்கதுறையினரின் சோதனை நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. ஒவ்வொரு நகைக்கடையின் முன்பும் 2 பிஎஸ்எப் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பிற்கு நிற்க இந்த சோதனை நடந்தது. பரபரப்பான கடைவீதியில் பகலில் நடந்த இந்த அமலாக்கத்துறையினரின் சோதனை யாருக்கும் தெரியவில்லை என எடுத்துக்கொண்டாலும் இரவு 10 மணிக்கு மேல் நகை கடைகளில் லைட் போட்டுக்கொண்டு சோதனை நடந்தது. அந்த வழியாக தான் ரோந்து போலீசார் சென்றிருக்க வேண்டும் ஆனாலும் கோட்டை போலீசாருக்கு அமலாக்கத்துறையினரின் சோதனை குறித்த தகவல் தெரியவில்லை என கூறப்படுகிறது. நள்ளிரவு 2 மணிக்கு தற்செயலாக ஏட்டு ஒருவருக்கு தகவல் தெரியவர அதன் பின்னரே கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சோதனை நடக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அதன் பின்னரே நுண்ணறிவுப்பிரிவு ஏட்டுக்கு தெரியவந்துள்ளது. கோட்டை போலீசாருக்கு E.D சோதனை தெரியாமல் போன விவகாரம் மாநகர போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.