இந்திய தொழில் கூட்டமைப்பின் மாணவர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” கரூர் பிரிவின் நான்காம் ஆண்டு விழா நேற்று ரெசிடன்சி ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது..
உழைப்பு என்பதை கருத்தில் கொண்டால் தமிழக முதல்வரின் 50 ஆண்டுகால உழைப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தனது மீதான விமர்சனங்களையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் எந்தவிதமான விமர்சனங்கள் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு உழைப்பு, உழைப்பு என்றே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் முதல்வர் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெறும் அளவிற்கு ஒரு உரிய நோக்கத்தோடு நமது திட்டங்கள் உள்ளன.சில திட்டங்கள் வெளிநாடுகளிலும் கூட செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காலை உணவுத்திட்டம். வேலைக்கு செல்லும் ஏழைபெண்கள் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டார்களா? என்கிற கவலை இருக்க கூடாது என்பதற்காக துவக்கப்பட்ட திட்டம் காலை உணவுத்திட்டம். அதேபோல் தமிழக அரசின் நான் முதல்வர் திட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான திட்டம். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதில் முதல்வர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்திய வெள்ளப்பாதிப்பு. பாதிக்கப்பட்ட விழுப்புரத்திற்கு என்னை உடனடியாக சென்று பணிகளை கவனிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். ஆய்வுக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமின்றி முழுமையாக கவனம் செலுத்தி பணிகளை விரைவாக செய்திடும் வகையில் தொடர்ந்து கண்காணித்தார். அதனால் தான் மற்ற துறைகளுக்கு முன்பாக மின்துறை மிக விரைவாக செயல்பட முடிந்தது. எப்போதும் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு இறுதியில் மின்துறை பணிகளை மேற்கொள்ளும் .. ஆனால் விழுப்புரத்தில் மற்ற துறைகளின் பணிகளை் முடிக்கும் முன்பு மின்துறை தனது பணிகளை முடித்துவிட்டு முதலில் மின்துறை வந்துவிட்டது. இளம் தலைமுறையினர் தங்களுக்கு முன் உதாரணமாக சில நபர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். என்னை பொருத்தவரை தமிழக முதல்வர் தான் எனது ரோல் மாடல்.. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்..