திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் 6 மாதத்திற்க முன் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது ஒரே மகள் துர்கா, இவர் பட்டதாரி. இவருக்கு 2015ல் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளுக்கு தாய். இவர் 2022ல் நடந்த தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப்2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதன் மூலம் இவருக்கு நகராட்சி ஆணையர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் தனது சொந்த மாவட்டமான திருத்துறைப்பூண்டியிலேயே நகராட்சி ஆணையகராக பணியிடம் ஒதுக்கப்பட்டு அங்கு நாளை பதவியேற்க உள்ளார். துர்காவின் சாதனையை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார். கல்வியால் துர்கா உயர்ந்து உள்ளார். எனவே அனைவரும் கல்வி கற்று உயருங்கள் என துர்காவை உதாரணமாக காட்டி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
முதல்வரின் பாரைாட்டுக்கு சொந்தக்காரரான துர்கா, ஆணையர் பதவியேற்பது குறித்து கூறியதாவது:
எனது தந்தை சேகர், மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். சமூகத்தில் நிலவுகின்ற பொது பார்வையில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பல்வேறு அவமானங்களை எனது தந்தையார் சந்தித்தார். ஆனால் அதனை அவமானங்கள் என்று கூட அவரால் கருத முடியாத அளவிலேயே அவரது புரிதல்கள் இருந்தன. இதனை அருகில் இருந்து பார்த்தவள் நான். அவர் நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டது கிடையாது.
மேலும் எனது தந்தையாரின் விருப்பம் நான் ஒரு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பதே. பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்று ஆகிவிட்டது என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். தந்தையைப் போலவே எனது கணவன் நிர்மல் குமாரும் என்னை ஊக்கப்படுத்தினார்.
கடந்த 2016 ம் ஆண்டு முதல் நான் தொடர்ச்சியாக எழுதிய குரூப் 1, மற்றும் குரூப் 4, அதனைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வுகளுக்கு என்னை அனுமதித்தது மட்டுமின்றி, குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்தியதன் பலனாக, இன்று குரூப் 2 தேர்வில் என்னால் வெற்றி பெற முடிந்தது. குரூப் 2 தேர்வு முடிந்து வெவ்வேறு அரசுத் துறைகளிலும் பணிவாய்ப்பு இருந்த போதிலும், நான் நகராட்சி ஆணையர் பதவியை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். தூய்மை பணியாளராக பணியாற்றும்போது எனது தந்தையார் பட்ட அவமானங்களை எனது கல்வியின் மூலம் துடைத்து விட்டேன். என்கின்ற நிம்மதி இதன் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது.தந்தை தற்போது உயிருடன் இல்லை என்றாலும், ஆணையர் பதவியில் நான் செய்கின்ற பணிகள் முழுமையிலும் என் தந்தை நிறைந்து இருப்பார். அவர் என்னை வழிநடத்துவார் . நான் இளைஞர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான். முதல்வர் அவர்கள் கூறியது போல எந்த நிலையிலும் கல்வியை விட்டு விடாதீர்கள். அது தான் நமது வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.