Skip to content
Home » திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் இஸ்லாமியர்கள்  விமானத்திற்க காத்திருக்கும் நேரத்தில் தொழுகை நடத்த இடவசதி செய்துதருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ விமான நிலைய ஆணையக் குழுமத்திடம் பரிந்துரைத்தார். அந்த வகையில் புதிய முனையத்தில் இஸ்லாமியர்களுக்கான தொழுகை அறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தொழுகை அறையை துரை.வைகோ திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு இஸ்லாமிய மக்களுடன் இணைந்து அவர் தொழுகையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து  துரை.வைகோ எம்பி கூறியதாவது:-

இந்தியாவில் முன்மாதிரி  விமான நிலையமாக திருச்சி அமைய வேண்டும் என அதிகாரிகள் ஒத்துழைப்போடு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் வரவு இரு மடங்காகியுள்ளது. ஒரே நாளில் 7000 பேர் வருகை தந்துள்ளனர். பயணிகள் விமானத்தில் சரக்குகளும் ஏற்றப்படுவதால் அதிக அளவு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. பெரிய அளவிலான விமானம் தேவை என கேட்டிருக்கிறோம். பலர் திருச்சிக்கு சரக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு பல்வேறு விமான நிலையங்கள் தேடிப்போ கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரத்யேகமாக சரக்கு விமான சேவை தினசரி 2 என்ற வகையில் கொண்டு வரவேண்டும். ஏர் இந்தியா கூடுதல் விமான சேவை வரும்போது, இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமீரக நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கும் திருச்சி வந்துசெல்ல அனுமதி வழங்க வேண்டும்.

திருச்சியில் இருந்து உள்நாட்டு சேவையை இண்டிகோ விமான நிறுவனம் மட்டுமே அளித்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களுக்களான டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் சேவை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாக, சமூக வலை தளங்களில் வெளியாகும் தகவல்கள் திருச்சி விமான நிலையத்துக்கு அவபெயரை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தினருக்கு சுங்கத்துறையினர் மிகுந்த நெருக்கடி கொடுப்பதாகவும், டார்ச்சர் செய்வதாகவும் உள்ள குற்றச்சாட்டு வருத்தத்துக்குரியது. இது தவறான போக்கு என விமான நிலைய மற்றும் சுங்கத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலவசங்களை கண்டித்துள்ளார். மகாராஷ்டிராத்தில் பாஜக கூட்டணி, 7 மாதத்துக்கு முன்பே மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,000 கொடுத்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது டில்லி தேர்தலில் சமையல் எரிவாயு உருளை, மகளிர் தொகை ரூ. 2000 என இலவசங்களை அறிவித்துள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை பொங்கல் தொகுப்பு பொரும்பாலானோருக்கு வழங்கி உள்ளனர். விடுபட்டவர்களுக்கு கொடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் விமான நிலைய பொறுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.