Skip to content
Home » பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:

500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள் , இதனை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசு பள்ளிகளில் இருக்கும் அடிப்படை , கட்டமைப்பை  மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.

ஒன்றிய அரசிடம் , அமைச்சர் அன்பில் மகேஷ் , மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் ஒன்றிய அமைச்சர் தேசிய கல்விகொள்கை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன்? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை ,  இந்த விவகாரத்தில் அமைச்சர் மகேஷ் உறுதியுடன் இருக்கிறார். சிறப்பாக செயல்படுகிறார்.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97% முடிந்து விட்டது. இன்னும் 6 மாதத்தில்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என விரும்புகிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , பொங்கல்  சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது,

செல்லூர் ராஜூ கூறியது  ஆங்கில புத்தாண்டின்  மிகப்பெரிய ஜோக் ஆகும். இதனை பற்றி  மேலும் பேச ஒன்றுமில்லை.

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும்.  டில்லியில் சட்டம் ஒழுங்கு, பாஜக கையில் உள்ளது, ஆனால் தலைநகரில் எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கி சூடு நடைபெற்ற வருகிறது, தலைநகரத்திலே மக்களுக்கு பாதுகாப்பில்லை.

அண்ணா பல்கலைக்கழக  பாலியல்  சம்பவம் இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கையை  தீவிர படுத்த வேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு.  இந்த விவகாரத்தில் அண்ணாமலை  பொய்யான குற்றச்சாட்டுகளை  கூறி  வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.