Skip to content
Home » சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

  • by Senthil

மதிமுக தலைமை நிலையச் செயலாளர்  துரை வைகோ இன்று, சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்  கண்ணப்பனை சந்தித்து பேசினார். அப்போது அவர்  68 சமூக மக்களின் கோரி்க்கை  தொடர்பாக ஒரு மனு கொடுத்தார். இது குறித்து துரை வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று காலை (05.02.2024) காலை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்தனர்.
அப்போது கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரார், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு சலுகைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு பழங்குடியினர்’ DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு சலுகைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர்’ DNCs (Denotified communities) எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் முறை உள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள், சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இன்று (05.02.2024) பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன் தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்க நிர்வாகிகளை அழைத்து வந்திருந்தார்.
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் அவர்களை சந்தித்து தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகளின் கோரிக்கை பற்றி விரிவாக எடுத்து கூறினேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து இந்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
அப்போது தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!