மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளருமான துரை வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை அவர்களும் ஒதுக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.
பா.ஜ.க வை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே இது போன்று வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது.
தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்காகவே சின்னம் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பாஜக முயல்கிறது.மதிமுகவை போல இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்கப்படவில்லை என கூறும் தேர்தல் ஆணையம் இரண்டு தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏன் இன்னும் சின்னம் ஒதுக்கவில்லை.? தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட பிளான் தயாராக உள்ளது .
சமீபத்தில் நான் பேசிய பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் , எங்கள் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசியுள்ளார். ஆனாலும் விஜயபாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.