முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி வீட்டில் இருந்த துரை தயாநிதிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெட்ரூமில் அவர் மயங்கி விழுந்ததாகவும் இதையடுத்து அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. துரை தயாநிதிக்கு மூளை வாத பிரச்சினை இருந்ததாகவும், இதற்காக அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஒரு மாதகாலம் சிகிச்சையில் இருந்த துரைதயாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். துரைதயாநிதி முழுமையாக குணமடையவில்லை என்றாலும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைபெற முடிவு செய்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.