தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஏன் உரிய அழுத்தம் தரவில்லை..? . தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தவில்லை என சுரங்க அமைச்சகம் கூறியுள்ளது. சுரங்கம் தொடர்பாக பிரமருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்களை தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை. மக்கள்ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் 10 மாதமாக தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று அவர் தெரிவித்தார். இதனிடையே டங்ஸ்டனுக்கு ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்தார்.
டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுவதாக சட்டசபையில் தீர்மானத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் முன் மொழிந்தார். மேலும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள் என்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு எதிர்த்த போதும் சுரங்க ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். சட்டசபை உறுப்பினர்களின் கருத்துகளுக்குப்பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.