வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, இந்த அமைப்பு அதே பகுதியில் நிலவுகிறது. அது இன்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். அதன்பின், இந்த அமைப்பு, வடக்கு, வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.