திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான
கரூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துநூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று பங்குனி உத்திரம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்.அப்போது அங்கு ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன்,தள்ளு முள்ளு ஏற்படாத வகையில் பக்தர்களை வரிசையில் அனுப்பினர். அப்போது பக்தர் ஒருவர் திடீரென
இடையில் புகுந்து வரிசையில் நுழைய முயன்றார். இதனைக் கண்ட டிஎஸ்பி பழனி அந்த பக்தரை ஒருமையில் பேசியதுடன்,
செருப்பால் அடிப்பேன் என ஆவேசத்துடன் பேசினார். அப்போது அதனை பக்தர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சூழலில் இந்த வீடியோ குறித்து எஸ்.பி செல்வநாகரத்தினம் டிஎஸ்பி பழனியிடம் விசாரணை நடத்தி அவருக்கு மெமோ அளித்துள்ளார்.