Skip to content
Home » கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

29ம் தேதி  இரவு கரூரில் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்ற போது கம்பம் விடும் இடமான அமராவதி ஆற்றங்கரைக்கு சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் புலியூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த சஞ்சய் குமார் (24 ), ஜெகதாபி மூலக்கவுண்டனூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கன்( 23), தெற்கு சணபிரட்டையை சேர்ந்த ரபிநாத் (23) ஆகிய  4 பேர் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் ராமகவுண்டனூர் பகுதியில் மது போதையில் விழாவிற்கு வந்தவர்களிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு காவல் பணியில் ஈடுபட்ட கரூர் ஆயுதப்படை காவலரான சரவணன், சூர்யா அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரை தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது காவலர் மற்றும் நான்கு நபர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக ஆனது . இதில் ஆயுதப்படை காவலர் சரவணனுக்கு கை முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து சரவணன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கரூர் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நள்ளிரவில் சூர்யா அவரது மூன்று நண்பர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சூர்யாவின் தாய் லதா காயம் பட்ட காவலரை நேற்று இரவு மருத்துவமனையில் நேரில் சென்று பார்ப்பதற்காக சென்ற பொழுது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று சூர்யாவின் சகோதரிகள் காவல் நிலையத்தில் அண்ணனை பார்ப்பதற்காக  வந்த பொழுது எங்கள் அண்ணனை எப்படி நீங்கள் தாக்கலாம், அவர் தவறு செய்தால் அவரை நீதிமன்றத்தில் தான் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றனர் அப்போது நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார்.

மேலும் சூர்யாவின் சகோதரிகள்  அண்ணனை பார்க்க வேண்டும் என்று கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .மேலும் உங்கள் அண்ணனை பார்க்க இருவரும்  உள்ளே வாருங்கள் என்று போலீசார் அழைத்துச் சென்று அங்கு அவர்களை பெண் காவலர்கள் சூர்யாவின் சகோதரி இருவரின் தலை முடியை பிடித்து இழுத்ததாகவும் மேலும் காவல் ஆய்வாளர் படியில் எங்களை தள்ளியதாகவும் அவர்கள் கூச்சலிட்டபடியே வெளியே வந்து கூறினர்.

மேலும் காவல்துறை குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு காவல் நிலையத்தில் இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் எவ்வாறு நியாயம் கிடைக்கும் என்று பெண்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் ,சூர்யாவின் சகோதரிகளிடம் உங்களது சகோதரர் மீது தவறு இல்லை என்றால் அவருக்காக புகார் மனு எழுதி கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என கூறினார் அதற்கு அந்தப் பெண்கள் புகார் மனு அளிக்க வந்த எங்களுக்கு இந்த நிலைமையா என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் ஆயுதப்படை காவலரை தாக்கியதாக சூர்யா, ரபிநாத், சஞ்சய் குமார், ஸ்ரீரங்கன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!