கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் (32) என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி பிரிவு அருகே அவரது வாகனத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த பிரபாகரனின் மனைவி சண்முகப்பிரியா சம்பவ இடம் சென்று பார்த்துவிட்டு, நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் இறந்த போன பிரபாகரனின் தங்கையின் கணவரான கோவை போத்தனூரை சேர்ந்த சாதிக் பாஷா (36) என்பவரை விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் தனக்கும் பிரபாகரனின் தங்கை திருமணம் நடந்து பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது, அதற்கு தடையாக இருந்த பிரபாகரன் மீது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தனது நண்பர்களான மணிகண்டன் (24) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் மூலம் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து கடந்த-5 ம் தேதி பிரபாகரனை வாடகைக்கு அழைப்பது போல் மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஒருவரும் பிரபாகரனை வரவழைத்து கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து சாதிக்பாஷா, மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவனை சிறுவர் சீர் திருத்த பள்ளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கொலை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.