திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தினை யூடியூபில் பாட்டு கேட்டுக்கொண்டே ஒரு கையால் இயக்கிய ஓட்டுநரின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கரூர் மண்டலம், கரூர் கிளையை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு சுமார் 20 பயணிகளுடன் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட அந்த பேருந்தினை இயக்கிய ஓட்டுநர் பயணிகள் பாதுகாப்பை உணராமல் தனது செல்போனில் யூடியூபில் பாடல் கேட்டு கொண்டே ஒற்றை கையில் பேருந்தை இயக்கியுள்ளார்.
TN45 N 4170 என்ற பதிவு எண் கொண்ட அந்த
பேருந்தின் ஓட்டுநரின் பொறுப்பின்மை காரணமாக குழந்தைகளுடன், பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் அச்சத்துடன் பயணம் செய்துள்ளனர்.
சுமார் 5 நிமிடம் வரை ஓட்டுநர் பொறுப்பில்லாமல் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு பேருந்தை இயக்கிய வீடியோவை பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.