அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே உள்ள இடப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்துவரும் நிலையில், இவரது உறவினர் ஷீலா சாந்திக்கு (ஒப்படியாள்) ஜெயங்கொண்டம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, நகராட்சி அலுவலர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மணிமேகலை மன உளைச்சலுக்கு ஆளாகி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது என்று கூறி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அப்போது அரசு தலையீடு இருப்பதாகவும் கூறி கோஷமிட்டார். பின்னர் சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்து வந்த ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த பெண்மணி அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..
- by Authour
