சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 198 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிக்கல் கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் , பொன்வெளி,கீழவெளி உள்ளிட்ட 7, கிராம மக்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாலிதீன் கொண்டு நிலத்தை மாசு படுத்தக் கூடாது என்றும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவி விமலாராஜன் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அப்போது கூறிய பொதுமக்கள், பொன்வெளி கிராமத்தில் தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும், எனவே நீரை தேக்கி வைத்து பயன்படுத்த அந்த பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைக் கேட்ட பொன்வெளி
கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட, தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தை எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். மேலும் மேல் நிலை தண்ணீர் தொட்டி கட்ட ஊராட்சிக்கு எவ்வளவு நிலம் தேவையோ அதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதனை சற்று எதிர்பாராத அப்பகுதி மக்கள், இந்த மனசு தான் சார் கடவுள் என கைதட்டி மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர்.
தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்கமாட்டான் என்ற பழமொழியை மாற்றி ஊருக்கே தண்ணீர் கொடுக்க வந்த புண்ணியவான் என்ற புது மொழி போல், சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டம் சிக்கலில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்ட சொந்த இடத்தை தானமாக வழங்கிய தாராள மனசுக்காரரின் தான செயல், அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.