திருவாரூர் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது அங்கிருந்து தண்ணீர் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக ராட்சத இரும்பு குழாய் மூலம் நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து குடி தண்ணீர் நாகை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்வேளூர் ஓடம் போக்கி ஆற்றின்
குறுக்கே செல்லும் ராட்ச குழாயில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நாகை நகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்