திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாக வெளியேறிய குடிநீர். துரிதமாக செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.
நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின்
குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில்,பளூர், பணமங்கலம், கூத்தூர்,ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உள்ள வால்வில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி மண்டல செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து வீணாக வெளியே சென்ற குடிநீரை தடுத்து நிறுத்தினார். துரிதமாக செயல்பட்டு வீணாக சென்ற குடிநீரை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.