Skip to content
Home » விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இவ்வாறு ஒருபக்கம் கோலாகலமாக ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில், பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும் வந்த வண்ணமே இருக்கின்றன. அதாவது, ராமர் கோயில் திறப்பை ஏதோ அரசியல் நிகழ்வை போல பிரமதர் மோடி நடத்துவதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயுதமாக ராமர் கோயிலை பாஜக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இது அரசியல் ரீதியான விமர்சனம் என்றால், ஆன்மிக ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன. அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் பிரதமர் வரக்கூடாது என்றும், அவரது கையால் ராமருக்கு பிரதிஷ்டை செய்யக்கூடாது எனவும் பல சங்கராச்சாரியார்கள் கூறுகின்றனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மோடி என்பதால் இதுபோல அவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி விமர்சனங்களும், கொண்டாட்டங்களும் ஒருசேர நடந்து கொண்டிருக்க, அயோத்தி ராமருக்காக பொதுமக்கள் நெய்து கொடுத்த துணிகளை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நீங்கள் என்ன உடையில் வரப் போகிறீர்கள்? என்று நிருபர்கள் ஜாலியாக கேட்டனர்.

அதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “என் வீட்டில் நான் என்ன உடை உடுத்துகிறேனோ, அதையே தான் வெளியேயும் உடுத்துகிறேன். இடத்திற்கு ஏற்றவாறு விதமான, ஆடம்பரமான ஆடைகள் அணிந்து மக்களை முட்டாளாக்கக் கூடாது. அப்படி முட்டாள் ஆக்குபவன் நான் கிடையாது” என்றார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் இப்படி கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!