விழுப்புரம் அருகே உள்ள வழுத ரெட்டி என்ற இடத்தில் சமூக நீதி போராளிகள் மணி மண்டபம், முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:
உதயசூரியன் சின்னத்தில் நின்று முதன் முதலாக வெற்றி பெற்றவர் எ. கோவிந்தசாமி, அண்ணா, கலைஞர் ஆகியேரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் மறைந்தபோது அவரது குடும்பத்துக்கு நிதி திரட்டி கொடுத்தோம். அந்த நிதி திரட்டி கொடுத்ததில் எனது பங்கும் உண்டு. இப்போது நான் அவரது மணி மண்டபத்தை திறந்து வைக்கும் பெருமை கிடைத்து.
அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடுக்காக போராடிய மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர்கள் 21 பேரை காகம், குருவிகள் போல சுட்டு கொன்றனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்கவில்லை.
1989 தேர்தலின்போது, திமுக தலைவர் கலைஞர், திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு மிகபிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்த 43 வது நாளில் வன்னியர்கள் உள்ளிட்ட மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு வழங்கினார்.
இதனால் அந்த சமூகத்தினர் கல்வியில் வேலை வாய்ப்பில் இன்று பயனடைந்து வருகிறார்கள். இந்த சமூக நீதி போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டவர் கலைஞர். இன்றும் அந்த உதவித் தொகை வந்து கொண்டிருக்கிறது.இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
வாழப்பாடி ராமமூர்த்தியும், வன்னிய அடிகளும் முதல்வரை சந்தித்து சென்னையில் ராமசாமி படையாச்சிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது நான் மேயராக இருந்ததால் அந்த கோரிக்கை என்னிடத்தில் வந்தது. நான் அதற்கு அனுமதி அளித்தேன்.
இப்போது திமுக 6வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தேன். அதன்படி இன்று மணிமண்டபம் திறக்படப்டு உள்ளது.
திமுக பிற்பட்ட மக்களுக்காக, மிக பிற்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்த இயக்கம். 1950ல் இட ஒதுக்கீடுக்காக முதல் சட்ட திருத்தம் கொண்டு வர காரணமானவர்கள் பெரியாரும், அண்ணாவும்.
பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு 16 %ல் இருந்து 18% ஆக உயர்த்தினோம். இது போல பிற்பட்டோர், அருந்ததியர், இஸ்லாமியர், வன்னியர் உள்ளிட்ட மிக பிற்பட்டோர் என அனைவருக்கும் தனி இட ஒதுக்கீடு கொடுத்தோம்.
திமுகவின் சமூகநீதி பயணம் 100 ஆண்டுகளை கடந்தும் தொடருது. இந்த விழாவில் மணிமண்டபம், சமூகநீதி போராளிகள் நினைவு மண்டபம் திறப்பு விழாக்களுடன் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முடிந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியின் மீது குறைகளை சொல்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை. அது அவர்களது சிந்தனை குறைபாடு. நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது. தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவது தான் நம் இலக்கு.
இந்த ஆட்சியை ஸ்டாலின் ஆட்சி என்று குறுகிய வட்டத்திற்குள் இருந்து சொல்ல மாட்டேன். இது திராவிட ஆட்சிதான். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இது திராவிட ஆட்சி தான். திராவிடம் தான் தமிழ்நாட்டை உருவாக்கியது. தமிழ்நாடு என பெயர் சூட்டியது. திராவிடம் தான் செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிடம். தமிழ்நாடு இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி இருப்பதற்கு காரணம் திராவிடம் தான். திராவிடம் தான் பெண்களை படிக்க வைத்தது. எனவே இது திராவிட மாடல் ஆட்சி என்று நெஞ்சை உயா்த்தி சொல்வோம். திராவிடம் தான் இட ஒதுக்கீடு பெற்று தந்தது. திராவிடம் தான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கி தந்தது. அது மேலும் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.