காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை வாய்க்கால்கள் இக்கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர்
செல்ல முடியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஸ்ரீரங்ம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை நேரில் சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர். உடனடியாக வாய்க்கால் பகுதிக்கு சென்று எந்தெந்த பகுதிகளில் வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடைகள் உள்ளது என்பதை கண்டறிந்தார். வாய்க்காலில் இறங்கி அவற்றை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி கரையை பலப்படுத்த கோரிக்கை மனு அளித்தார். இந்ந நிகழ்ச்சியின் போது அந்தநல்லூர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மலர் அறிவரசன், திமுக நிர்வாகி கைக்குடி சாமி, எம்.எல்.ஏ வின் உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி துணை அமைப்பாளர் லட்சுமணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.