தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாணிப கழக கூடுதல் பதிவாளர் லோகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணியாளர்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடக் கூடாது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முன்னுரிமை அடிப்படையில் உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு குறைவாகவும், தரமாகவும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் கொண்டு வரும் சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களின் உண்மைத்தன்மை அறிந்து கொள்முதல் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது.
டெல்டா மாவட்டங்களில் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் கொள்முதல் பணி நடைபெறுவதைக் கண்காணிக்க 9 விழிப்புப்பணி குழுக்கள் அனுப்பப்பட்டு, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர் நா. உமா மகேஸ்வரி, மேலாளர்கள் மு. நத்தர்ஷா (நிர்வாகம்), வீ. அன்புராஜா (தரக்கட்டுப்பாடு), துணை மேலாளர்கள், கொள்முதல் அலுவலர்கள், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.