கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் 90 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அதிக சம்பளம் பெறும் மனைவி, விவாகரத்திற்கு பிறகு பராமரிப்பு தொகையாக 4 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அந்த தொகையை குறைக்க பெண் நீதிபதி லஞ்சம் கேட்டதாகவும் அதில் கூறியிருந்தார். தன் மீதும் குடும்பத்தினர் மீதும் மனைவி குடும்பத்தினர் வரதட்சணை புகார் கொடுத்தனர் என்றும் அடுக்கடுக்கான புகார்களை வீடியோ பதிவில் சுபாஷ் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்த நிலையில், வரதட்சணை புகார் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கணவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பழிவாங்க வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களை பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்வதாக கவலை தெரிவித்தனர். பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏ பிரிவு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர்கள், ஆனால் அதனை பயன்படுத்தி கணவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்திருப்பதாக கூறினர்.
கொடுமைக்கு ஆளாகும் போது, பெண்கள் புகார் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்றும் கூறினர். திருமண உறவில் பிரச்சனை ஏற்படும் போது, கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொய்யான புகார்களை கூறுவது தடுக்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு கேடயம் அதையே ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்திய அவர்கள், இதனால் சட்டத்தின் நோக்கமே நீர்த்து போவதாக கவலை தெரிவித்தனர்.