Skip to content
Home » 1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சென்னை அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் அம்பத்தூரில் மரக்கடை மற்றும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய மகள் பிரியதர்ஷினி  டாக்டராக உள்ளார். அவருக்கும்  அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தனின் மகன் சதீஷ்குமாருக்கும்(கவுன்சிலர்)  திருமணம் நடந்தது.

26.2.2018-ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் 25.4.2018-ல் திருமணமும் நடந்தது. எனது மகள் பிரியதர்ஷிணி, கணவர் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் கேட்டப்படி ஆடி கார், பி.எம்.டபுள்யூ கார் ஆகியவற்றையும் சீர்வரிசை பொருள்களையும் கொடுத்தேன். திருமணம் நடந்த சில தினங்கள் மாப்பிள்ளையும் என் மகளும் சந்தோஷமாக இருந்தனர். அதன் பிறகு கணவரின் சகோதரி இந்துமதி, மாப்பிள்ளையின் அம்மா ஆகியோர் என் மகளிடம் 1,000 சரவன் தங்க நகைகள் போடவில்லை என்று கொடுமைப்படுத்தத் தொடங்கினர். இந்தக் கொடுமை குறித்து போனிலும் நேரிலும் என் மகள் என்னிடம் தெரிவித்தார். அதனால் நான், கே.பி.கந்தனிடம் என் மகளை கொடுமைப்படுத்த வேண்டாம் என்றும், நீங்கள் கேட்ட நகைகளை கொடுத்துவிடுகிறேன் என்றும் கூறினேன்.
ஆடி மாதத்தில் என் மகளுக்கு வைரத்தில் தாலி செயினும் மாப்பிள்ளைக்கு வெள்ளியில் தட்டும் டம்பளரும் கொடுத்தேன். பின்னர் என் மகளின் முதல் திருமண நாள் அன்றும் மருமகனுக்கு பெல்ட் அன்பளிப்பாக கொடுத்தேன். அப்போது அவர் `ஏன் தங்க நகைகள் கொடுக்கவில்லை’ என்று கூறி, என் மகளை அடித்து தகராறு செய்தார். அப்போது என் மகள் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதன் பிறகு என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை என்பதால், என் மருமகன் வீட்டில் யாருக்கும் சந்தோஷம் இல்லை. அதையே காரணமாக வைத்து என் மருமகன் குடும்பத்தினர் என் மகளை வார்த்தையால் கொடுமைப்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் என் மகளை அவரின் கணவர் குடும்பத்தினர் அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது என் மகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவரை மருத்துவமனைக்குக்கூட அழைத்துச் செல்லவில்லை.
இந்த நிலையில் என் மகளையும் குழந்தையையும் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். அதனால் அவர்கள் இருவரும் என் வீட்டுக்கு வந்துவிட்டனர். இது தொடர்பாக கே.பி.கந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் போனில் பேசினேன். ஆனால் எந்தவித பலனும் இல்லை. இந்த நிலையில் விவாகரத்து வேண்டி பொய்யான தகவலை சேர்த்து குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என் மகளின் நகைகள் செல்போன்கள், துணிகள் எல்லாம் மாப்பிள்ளையின் வீட்டிலேயே உள்ளது. மேலும் என் மகளின் நன்மதிப்பையும் அவர்கள் களங்கப்படுத்தி வருகிறார்கள். தற்போது நான் கே.பி.கந்தனை நேரில் சந்தித்துப் பேசியபோது, மேலும் 500 சவரன் தங்க நகைகள், மகனின் வியாபாரத்துக்கு 10 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கேட்டார். எனவே என் மகளை வரதட்சணைக் கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டுக்கு அனுப்பிவைத்த சதீஷ்குமார், கே.பி.கந்தன் அவரின் மனைவி சந்திரா, மகள் இந்துமதி ஆகியோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று  கவுன்சிலர்  சதி்ஷ்குமார் டிஜிபி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் , நாங்கள்  எந்த  கொடுமையும் செய்யவில்லை.  பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என  விளக்கி உள்ளார்.  கே.பி. கந்தன் இது குறித்து கூறும்போது என் மகன்  அதி்முகவில் நாடாளுமன்ற தேர்தலில் சீட் கேட்க இருக்கிறான். அதனால் அவனது பெயரை கெடுக்க  இந்த புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அரசியல் உள்ளது என்று கூறி னார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!